மும்பையில் கடந்த 10ம் தேதி துவங்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’ படப்பிடிப்பு இரண்டாவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் அதன் நாயகி நயன்தாரா இன்று முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்கிற செய்தியை தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் பிசியாக இருக்கும் நயன்தாரா கடும் கால்ஷீட் நெருக்கடிகளிலும் ‘தர்பார்’ படத்திற்கு தேதிகளை ஒதுக்கியிருக்கிறார். 120 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்த திட்டமிருக்கும் இப்படத்திற்கு நயன் சுமார் 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றும் அவர் ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல் முக்கியமான ஒரு வில்லி வேடத்தில் நடிப்பதாகவும் நம்பகமற்ற ஒரு தகவல் நடமாடுகிறது.

இந்நிலையில் இன்று மும்பை படப்பிடிப்பில் நயன் கலந்துகொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மாதம் வரை மும்பை ஷெட்யூல் தொடரவிருக்கும் நிலையில், நயன் 15 நாட்கள் வரை கால்ஷீட் தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கலர்ஸ் சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நயன்தாராதான் நடத்தவிருக்கிறார் என்கிற செய்தியும் பரபரப்பாகி வருகிறது.