எதில் கை வைத்தாலும் வெற்றிதான் என்பதில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சிக்கு  தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவரே இப்போது சினிமா ஹீரோ ஆகிவிட்டதால் கோடம்பாக்கத்தில் ஒரே ஆச்சர்ய அலைகள்.

30 கோடி பட்ஜெட் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் இப்போது ரஜினி பட பட்ஜெட்டை எல்லாம் தாண்டி விட்டது. விளம்பர பட இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இரட்டையர்களின் இயக்கத்தில் உருவாகப் போகும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய் என்கிறார்கள். 2020 ல்தான் ரிலீஸ் என்கிற இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கும் இப்படக்குழு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்திற்காக மட்டும் சுமார் ஐம்பது கோடியை அள்ளி இறைக்கப் போகிறதாம். மேக் -அப் போட ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்பட உள்ளார்கள்.

 

இந்தப்படத்தின் உயரம் தெரியாமல் ஓடிப் பதுங்கும் கதாநாயகிகள் ரிலீஸ் நேரத்தில் கதறப் போவது உறுதி. முக்கியமாக நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட நாயகிகள். ஏன்? அருளோடு ஜோடி போடுவதா? என்று ஓட்டமெடுத்தவர்களாச்சே?

இப்போது தமன்னாவை அணுகி இருப்பதாகச் சொல்கிறார்கள். அறுபது வயதை நெருங்கும் அருள் அண்ணாச்சி தனது அறிமுகப்படத்திலேயே 100 கோடி பட்ஜெட்டில் நடிக்கிறார். இந்திய சினிமாவில் எந்த அறிமுக நடிகரும் முதல் படத்தில் 100 கோடி பட்ஜெட்டில் நடித்ததே இல்லை. இதிலும் சாதனை படைத்து  விட்டார் அருள் அண்ணாச்சி.