நடிகை நயன்தாரா ஏற்கனவே 'ஸ்ரீராமராஜ்யம்',  'சைரா நரசிம்ம ரெட்டி' ஆகிய வரலாற்று படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது கன்னடத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு இயக்கும் இந்தப் படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். அம்சலேகா இசையமைக்கும் இந்த படத்தை, பி.எல்.வேணு என்பவர் எழுதிய வரலாற்று புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக உள்ளது.

 இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல கன்னட நடிகர் தர்ஷன் நடிக்கிறார். மேலும் மறைந்த பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான, அமரீஷின் மனைவியும், தற்போதைய எம்.பியான நடிகை சுமலதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அதே போல் முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான குத்து ரம்யா  நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு நாயகியாக   நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

நடிகை நயன்தாரா தெலுங்கு, தமிழ், மலையாளம், போன்ற மொழிகளில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் கன்னட திரையுலகில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். எனவே இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால் இது அவருடைய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் படக்குழுவினர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.