விசுவின் கதையில், கே.பாலச்சந்தர் திரைக்கதையில் எஸ்.பி. முத்துராமன் இயக்கிய படம் "நெற்றிக்கண்". இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் தலைப்பில் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் படம் "நெற்றிக்கண்". விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம், கொரியன் மொழியில் வெளியான "ப்ளைண்ட்" படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.   

கார் விபத்து பற்றிய வழக்கில் கண்பார்வையற்ற மாணவியின் சாட்சியத்தை கொண்டு அதிரடி திருப்பங்களுடன் எடுக்கப்பட்ட படம் "ப்ளைண்ட்". க்ரைம் திரில்லரான இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான "அவள்" என்ற ஹாரர் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். 

இந்தியில் தயாராகும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாபாத்திரத்தில் சோனம் கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொமான்ஸ் படங்களில் மட்டுமே நடித்து வந்த சோனம் கபூர், இந்த படத்தின் கதையை கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம்.ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை, கஹானி, பத்லா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜோய் கோஷ் இயக்குகிறார், ஷோமி மகிஜா தயாரிக்க உள்ளார்.