'கமலுடன் ஒரே ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் ‘இந்தியன் 2’ வோடு அவர் நடிப்புக்கு முழுக்குப்போட முடிவெடுத்துள்ளதால் அது நடக்க சாத்தியமுள்ளதா என்று தெரியவில்லை’ என்கிறார் தேசிய விருது பெற்ற நடிகரும் ரஜினியின் ‘பேட்ட’ பட வில்லனுமான நவாசுதின் சித்திக்.

பால்தாக்கரே பத்திரத்தில் நவாசுதின் நடித்திருக்கும் ‘தாக்கரே’ படம் கடந்த வாரம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நவாசுதின் பேட்டிக்கு மத்தியில் ரஜினி கமல் குறித்த தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

’’நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது ’தாக்கரே’ படத்தில் நடித்தேன். இதற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதை எல்லாம் உள்வாங்கி கொள்ளவேண்டும். உடன் நடித்த நடிகர்களில் தமிழில் விஜய் சேதுபதியையும், ரஜினியையும் ரொம்பவே பிடித்தது. ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்ய ஆசைப்படுகிறார். அதையே செய்கிறார்.

ஆனால் அதே சமயம்  நடிப்பில் கமல் பெரிய ஆளா ரஜினி பெரிய ஆளா என்று கம்பேர் பண்ணிப்பேசுவதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில்  கமலும் ஒருவர். கமலின் ’ஹேராம்’ படத்தில், ஒரு காட்சியில் தான் நடித்தேன். ஆனால் அந்த காட்சிபடத்தின் நீளம் காரணமாக வெட்டப்பட்டுவிட்டது. அவரது ‘ஆளவந்தான்’ இந்தியில் டப் செய்யப்பட்டபோது வசனப்பயிற்சியாளராக கமலுடன் பணி செய்தேன். அவருடன் சேர்ந்து ஒரு படமாவது நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் அரசியலுக்குப் போனதால் அது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை’ என்கிறார்.

இவ்வளவு பெரிய நடிகர் வெளிப்படையாக அறிவிக்கும்போது அதை ‘இந்தியன் 2’விலேயே ஷங்கர் சாத்தியப்படுத்தினாலும் ஆச்சர்யப்படவேண்டியதில்லை.