திரைக்கு வந்து இரு தினங்களே ஆன தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஒரே சமயத்தில் வானளாவிய பாராட்டுக்களையும் தரைமட்டத்துக்கு வசவுகளையும் சந்தித்துவரும் நிலையில் இப்படத்தை முன்னணி ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக பலராலும்  உலக லெவல் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் படம் முழுக்க கெட்ட வார்த்தைகள், அசிங்கமான சமாச்சாரங்கள். அதனால் குடும்பப் பெண்களை அழைத்துக்கொண்டு பார்க்கமுடியாது என்று சிலர் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'சூப்பர் டீலக்ஸ்' தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ... அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்’இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்..

நட்டி என்கிற இந்த நட்ராஜ் இந்தியில் 'ப்ளாக் ப்ரைடே', 'ஜப் வீ மெட்', 'கோல்மால் ரிட்டன்ஸ்', 'ஹாலிடே', 'புலி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் 'சதுரங்க வேட்டை', 'என்கிட்ட மோதாதே', 'போங்கு', 'ரிச்சி' உள்ளிட்ட சில படங்களிலும் நாயகனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.