திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகியோர் சக மாணவர்களால் கூட்டுச் சேர்ந்து அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான ரா.சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்..

"குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரி பருவங்களில் தெரியாத சாதி, மத மனநிலை, சமூகத்தோடு இணைந்து வாழ வரும் போது மட்டும் தெரிகிறது என்று பலமுறை பேசியிருக்கிறேன். ஆனால், தற்போது பள்ளி பருவத்திலே சக மாணவனை கூட்டுச் சேர்ந்து அரிவாளால் வெட்டினார்கள் என்ற செய்தியறிந்த போது மிகுந்த வேதனையடைந்தேன்". 

"இந்த பிரச்சனையை தமிழகத்தில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சாதிய ரீதியில் அணுகி, கருத்து தெரிவித்து வருகிறார்கள். மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு ஏற்பட என்ன காரணம் என்பது பற்றியோ, முழுமையாக குற்றத்தை சரிசெய்வதற்கான திட்டம் பற்றியோ, 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் சிந்திக்காமல் தங்களது சுய லாபத்திற்காக சாதி, மதம், மொழி பற்றி பேசி வருவதால், மாணவர்களுக்குள் நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை".

நீட் விவகாரத்தில் ஆளுநர் சொந்த கருத்தை திணிக்க கூடாது... இது போன்ற பேச்சை நிறுத்தி கொள்ள வேண்டும்- அன்புமணி

"மாணவப்பருவத்தில் கும்பலாக இணைந்து வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு மனநிலை கொடூரமாக மாறுகிறது என்றால், அதன் அடித்தள காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் உடல்நல பயிற்சி வகுப்புகள் நடத்துவது போல, உளவியல் ஆசிரியர்கள் நியமித்து, மாணவர்களுக்கு மனநல பயிற்சி வழங்க வேண்டும் என பலமுறை அரசுக்கு வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஆனால், அரசும், பள்ளி நிர்வாகத்தினரும் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை". 

"மாணவர்கள் சின்னதுரை மற்றும் சந்திர செல்வி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் அவரது தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

"இனி வருங்காலங்களில், இது போன்ற துயரநிலை தமிழகத்தில் எந்தவொரு குடும்பத்திலும், எந்தவொரு ஊரிலும் நடைபெறாமல் தடுப்பதற்கு, சாதி, மத, மொழி வேறுபாடுகளை மாணவ பருவத்தில் புகுத்தியவை எவை என்பதை கண்டறிந்து,. இப்பிரச்சனைக்கான அடிப்படை காரணங்களை ஆராய்ந்து, போர்க்கால அடிப்படையில் அடியோடு ஒழித்திட வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அவர்.

தூத்துக்குடி பொன் மாரியப்பனின் நூலக சலூன்.. நேரில் சென்று வாழ்த்திய அண்ணாமலை - காத்திருந்த இன்ப அதிர்ச்சி!