தமிழக வாலிப வயோதிக அன்பர்களை செல்லமாக மச்சான்ஸ் என்று அழைத்து வந்த கவர்ச்சி நடிகை நமீதா தனது ஜாகையை ஆந்திர மாநிலத்துக்கு மாற்ற உள்ளதாக பேரிடிச் செய்தி ஒன்று வந்துள்ளது.

2004ல் விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவர்ச்சி நடிகை நமீதா அடுத்த ஏழெட்டு ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆண்டு முடித்து பிறகு மெல்ல மார்க்கெட்டை இழந்தார். அடுத்து படங்கள் குறைந்த நிலையில் ஜவுளிக் கடை, நகைக்கடை, செல்போன் கடைத்திறப்புகளில் ரிப்பன் வெட்டுவதில் பிசியாக இருந்தார்.அந்த வகையில் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்துவைத்து முடித்துவிட்ட நிலையில் வீட்டில் ச்சும்மா பொழுதைப் போக்கி வந்தார் நமீதா.

இந்நிலையில் ‘உன்னைத் தெலுங்குல பெரிய ரவுண்டு வர வைக்கிறேன் என்னோட ஆந்திராவுக்குக் கிளம்பு என்று இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் நமீதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், அடுத்ததாக இயக்கும் படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகின.

இந்த இரு நாயகிகளுக்கு அடுத்தபடியாக  இந்த படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை நமீதாவும் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நமீதா இந்த படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையை திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. நமீதா ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஹிட் ஆகும் பட்சத்தில் தனக்கு ரிடையர்மெண்ட் கொடுத்த தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு நமீதா ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிடுவார் என்று தெரிகிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வீரா என்ற தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது.