தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை நக்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் களமிறங்கினார். இதனால் சினிமாவை விட்டு அவர் நீண்டகாலமாக விலகியே இருந்தார். தற்போது மீண்டும் அவர் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். 

மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து பேசிய நக்மா; “தென்னிந்திய சினிமா உலகில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. ரஜினியுடன் நடித்த பாட்ஷா, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படமான "காதலன்" போன்ற  படங்கள் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. பல முன்னணி நடிகர்களுக்கு நான் ஜோடியாக நடித்துள்ளேன். அப்போதெல்லாம் நான் நன்றாக நடனமாடுவதாக ரசிகர்கள் பாராட்டினார்கள்.

2002ஆம் ஆண்டில் வெளியான ஒரு தெலுங்கு படத்தில் ஆர்த்தி அகர்வாலின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். 2007ஆம் ஆண்டு வரை வங்காளம், போஜ்புரி, பாலிவுட் ஆகிய துறைகளில் சில படங்களில் நடித்தேன். அரசியலில் இறங்கிய பின்னர் சினிமாவை விட்டு விலகியே இருந்தேன். 

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். எல்லா மொழிகளிலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இப்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதில் ஒரு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்கிறேன். அதுமட்டுமல்ல தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள்  அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.