’நடிகர் சங்கக் கணக்கு வழக்குகளில் எந்தவித மோசடியும் நடக்கவில்லை. ஆனால் இந்த சங்கத்தை சீர் குலைப்பதற்காக தொடர்ந்து சதிகள் நடந்துவருகின்றன. இதற்காக சிலர் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்று 10 லட்சம் வரை அபராதம் செலுத்தியதையெல்லாம் மக்கள் அவ்வளவு லேசில் மறந்துவிட மாட்டார்கள்’என்கிறார் விஷால்.

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்ததால், நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார் விஷால். ‘ஆக்‌ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் விஷால். அந்தச் சந்திப்பு முடிவடைந்தவுடன், விஷாலிடம் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,’நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையே அரசாங்கத்தில் இருந்து சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வரும்வரை சிறப்பு அதிகாரி கவனிப்பார் எனச் சொல்லியிருக்கின்றனர். நாங்கள் எந்த வகையிலும் தப்பு பண்ணவில்லை, யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. இந்த வழக்குக்காக வீண் செலவு செய்யவில்லை. 

அப்படி செலவு செய்ய எங்களிடம் அவ்வளவு பணமுமில்லை. நாங்கள் செய்தது கட்டிடம் கட்டியது மட்டுமே. அதை, யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். நடிகர் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் கட்டிடம், கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம். ஏனென்றால், இணையத்தில் வங்கிக் கணக்குகளை வெளியிட்ட ஒரே சங்கம், நடிகர் சங்கம்தான். சங்கத்தின் செயல்பாடுகளை சீர்குலைப்பதற்காக  ஒரு நீதிபதியை தீர்ப்புக்காக நிர்பந்தித்து 10 லட்ச ரூபாய் அபராதம் கட்டினார் ஒரு நபர்.அதை மக்கள் அவ்வளவு லேசில் மறந்துவிட மாட்டார்கள்.

கடந்த 3 ஆண்டுகள் எப்படி உறுப்பினர்களைப் பார்த்துக் கொண்டோமோ, அப்படித்தான் இனியும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலை நடத்தினோம். விதிமுறைகளின்படியே தேர்தல் நடந்தது. எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. எப்போது வாக்குகளை எண்ணலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பு வந்து, வாக்குகள் எண்ணப்படும். அப்போது உறுப்பினர்கள் என்ன நினைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும். சிறப்பு அதிகாரி நியமனம், ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. அவர்களுக்கென்று விதிமுறைகள் இருக்கலாம். இன்று வரை நாங்கள் கடவுள் மாதிரி நீதிமன்றத்தை நம்புகிறோம்.விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்’என்கிறார் விஷால். ஆனால் விரைவில் 9 நபர்கள் கொண்ட கமிட்டி ஒன்றை நியமித்து விஷால் அணிகளுக்கு எதிரான தனது செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. எனவே ஓட்டு எண்ணிக்கை எப்போதுமே கூட நடைபெறாமல் போகலாம்.