கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தற்போது இந்தியா முழுவதிலும் உள்ள கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த பெப்சி மற்றும் நடிகர் சங்கங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசம்.

மிகவும் போராட்டமான இந்த நாட்களை அவர்கள் கடந்து வருவதற்கு, கை கொடுக்கும் விதமாக அந்தந்த திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் முடிந்த பணம் மற்றும் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

இன்றைய தினம் கூட ஹிந்தி திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, கோதுமை, மற்றும் அத்தியாவசிய பொருட்களை நடிகர் அமிதாப்பச்சன் வழங்கினார்.

அதே போல் தெலுங்கு திரையுலகினர் கோடி கோடியாக திரையுலகில் வேலை செய்து வரும் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி வழங்கினர்.

அதே போல்... தமிழ் திரையுலகை பெப்சி கலைஞர்களுக்கும் உதவும் நிலையில் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். ஆனால் இதுவரை தொழிலாளர்களுக்கு தேவையான உதவி  கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கோலிவுட்டை சேர்ந்த,  நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1000 ரூபாய் வழங்க கூட,  பணம் இல்லை என நடிகை குட்டி பத்மினி, மிகவும் உருக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  

குறிப்பாக ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றவர்கள் உதவ வேண்டும் என தாழ்மையோடு தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.

ஆனால், தற்போது வரை ஊரடங்கால் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்தை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு முன்னணி நடிகர்கள் யாரும் உதவ முன் வரவில்லை என்றே கூறப்படுகிறது.

இதுவரை ஐசரி கணேஷ் 10 லட்சம் மற்றும் நடிகர் கார்த்தி 2 லட்சம் என குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே அதுவும் குறைத்த அளவிலான பணம் மட்டுமே கொடுத்து உதவி உள்ளதாக கூறப்படுகிறது.