நடிகர் சங்க தேர்தலில் தில்லுமுல்லு... 138 ஓட்டுகள் அதிகமானது எப்படி? - பாக்யராஜ் அணியினர் பரபரப்பு புகார்
Nadigar sangam election : தேர்தல் நாளன்று பதிவானதாக கூறிய வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டுகள் அதிமகாக இருப்பதாக பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடைவிதித்து சென்னை ஐகோர்ட் தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை
பின்னர் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
முறைகேடு புகார்
வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணியினர் தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இந்நிலையில், தேர்தல் நாளன்று பதிவானதாக கூறிய வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டுகள் அதிமகாக இருப்பதாக பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம் அந்த அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் புகார் அளித்தார்.
நடிகர் பிரசாந்த் காட்டம்
இதுகுறித்து சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் பிரசாந்த் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையில் என்ன நடக்கிறது. ஏன் எதிர் அணியினர் இதுபற்றி பேச மறுக்கிறார்கள். 138 வாக்குகள் அதிகமானது எப்படி?... அது எங்கிருந்து வந்தது? இது அநீதி என தெரிவித்துள்ளார் பிரசாந்த்.
இதையும் படியுங்கள்... கோர விபத்தில் சிக்கி இளம் நடிகை பரிதாப பலி... ஹோலி கொண்டாடி விட்டு திரும்பியபோது நேர்ந்த சோகம்