நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். அனைத்து நடிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

*இதில் வாக்களிக்க வந்த குஷ்பு கூறும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்று கேள்வி குறியாக இருந்தது. பெரும் குழப்பங்களுக்குப்பின்னர் இன்று வெற்றிகரமாக நடந்து வருகிறது. நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும். நிறைய பேருக்கு தேர்தல் எங்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த முறை எங்கு நடந்ததோ அங்குதான் தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

* நடிகர் பொன்வண்ணன் தனது மனைவி சரண்யா உடன் வாக்களிக்க வந்தார். இவர் கடந்த முறை பாண்டவர் அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. 

* நடிகைகளும், சகோதரிகளுமான அம்பிகா, ராதா ஆகியோர் ஒன்றாக வாக்களிக்க வருகை தந்தனர். * நடிகைகள் பூர்ணிமா, குஷ்பு ஆகியோர் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

*இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் நடக்கிறது. எதிரணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். தேர்தல் நியாயமாக நடைபெறும் என்றும் அவர் பேட்டியளித்து உள்ளார்.

*காலையில் சைக்கிளிங் சென்ற ஆர்யா, அப்படியே இங்கு வந்து வாக்களிக்க வந்ததாக கூறினார். மேலும், இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம். அனைவரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவை எடுத்திருக்கலாம். நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கட்டிடம் உருவாக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்று ஆர்யா கூறினார்.