இன்னும் எத்தனை வாய்தாக்கள் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எண்ணும் கோரிக்கை வைக்கப்பட்ட விஷால் தரப்பு மனுவை மீண்டும் வரும் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதி மன்றம். 

விஷால் மற்றும் ஐசரி கணேஷ் அணிகள் மிக மட்டமாக ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகள் கூறிக்கொண்ட நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டதால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகள்  பல வாய்தாக்களை தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில் நேற்று  மறுபடியும் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர் ‘நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது. சங்க விதிகளின்படி உறுப்பினர்களை நீக்கவும், மாற்றவும் செயற்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாக்குகளை உடனே எண்ணவேண்டும் என்று வாதிட்டார். இது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 6-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

தேர்தல் முடிந்து இத்தோடு நான்கு மாதங்களும் 7 தினங்களும், அதாவது சுமார் 130 தினங்கள் கழித்தும் வாக்குகள் எண்ணப்படாத ஒரே தேர்தல் இதுவாகத்தானிருக்கும் என்று நம்பப்படுகிறது.