Naane varuven post: தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்படும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்படும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது. தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் படங்களில் பிஸியாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் உருவான நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றனர்.

செல்வராகவன் -தனுஷ் கூட்டணி:
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் செல்வராகவன். இவரது, இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்பது கூடுதல் பலம். குறிப்பாக, இயக்குனர் செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி என்றாலே பலருக்கும் அதிக அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கும்.

இவர்கள் மூவரும் இணைந்து கொடுத்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றிய தகவல்:
சமீபத்தில், தனுஷின் இரண்டு வேடங்களின் நடிக்கும் லுக் அடங்கிய போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் ஒரு லுக்கில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ், மற்றொரு லுக்கில் நடுத்தர வயது தோற்றம் கொண்டு உள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதன்மூலம் செல்வராகவன் இயக்கத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய போஸ்டர் சர்சை:
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு புவனா சுந்தர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இத்திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் தனுஷ், ஒய்யாரமாக சிகரெட் பிடித்து கொண்டிருக்கிறார். அதிக அளவில் வாலிபர்களை ரசிகர்களாக கொண்ட தனுஷ், புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் விதமாக இப்படியான போஸ்டர் வெளியிடுவது தவறான வழிகாட்டுதலாக மாறும் என விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னதாக எழுந்த சிகரெட் சர்சை:
முன்னதாக, வேலையில்லா பட்டதாரி, மாறன் உள்ளிட்ட படங்களில், தனுஷ் சிகரெட் பிடித்த காட்சிகள் சர்சையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் போஸ்டரின் மூலம் தனுஷ் அதே சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
