முத்தையா முரளிதரனின் சொந்தக்கதையான ‘800’படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்கனவே பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் குறித்து மீண்டும் ஒரு முறை அவர் சர்ச்சையாகப் பேசியுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஜய் சேதுபதி ஒரு தமிழன் என்பது உண்மையானால் அவர் இனியாவது அப்படத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்.தற்போது இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முரளிதரன் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொழும்புவில் நேற்று கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய முரளிதரன்,’தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான். இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்ததாக அதிபராக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்’என்று பேசியுள்ளார்.

மிக விரைவில் துவங்கப்பட உள்ள முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ல் விஜய் சேதுபதி நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகளுக்கு எதிராக விஷம் கக்கியுள்ள முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துதான் ஆகவேண்டுமா? என்று புதிய கோஷங்கள் வலைதளங்களில் வலம்வரத் துவங்கியுள்ளன. இது குறித்து எதுவும் பேச முடியாமல் தர்மசங்கடத்தில் தவிக்கிறார் விஜய் சேதுபதி.