விஸ்வாசம் சிவா, ரஜினி, சன் பிக்சர்ஸ் கூட்டணியின் ‘தலைவர் 168’படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பரபரப்பான கிசுகிசுக்கள் பரவிவரும் நிலையில் அந்த வாய்ப்பு டி.இமான் அல்லது அனிருத்துக்குக் கிடைக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது இமயமலை சென்றிருக்கும் ரஜினி அடுத்து பத்து நாட்கள் அங்கு ஆன்மிக ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்புகிறார். அவர் திரும்பி வருவதற்குள் படத்தின் சக நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை தேர்வு செய்து வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குநர் சிவா. இதில் ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உட்பட 90 சதவிகிதம் டெக்னீஷியன்கள் ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் இயக்குநர் சிவாவுடன் வேலை பார்த்தவர்களுக்கு ரஜினி தரப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓ.கே சொல்லியுள்ளது.

ஆனால் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது முக்கிய விவாதப்பொருளாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனமும் ரஜினியும் ‘பேட்ட’படத்துக்கு ஆரவாரமான ஹிட்களைக் கொடுத்த அனிருத்தை இசையமைப்பாளராக நியமித்தால் பழைய ஹிட்டு ரிப்பீட்டு ஆகும் என்று நினைக்கின்றனர். ஆனால் சிவாவோ தான் இயக்கப்போவது குடும்ப செண்டிமெண்ட் என்பதால் டி.இமானை வைத்து மீண்டும் ஆராரிராரோ பாட நினைக்கிறார். இருவரில் அதிர்ஷ்டசாலி யார் என்பது ரஜினி சென்னை திரும்பிய பிறகுதான் தெரியவரும் என்கிறார்கள்.