கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா விசில் அடித்த மாணவர்களைப் பார்த்து கடவுள் நம்பிக்கையில்லா கம்யூனிஸ்டுகள் என்று கடிந்து கொண்டார். கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், இளையராஜாவுடன் ஒரு இசைமாலை என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதற்காக இளையராஜா, கோவைக்கு சென்றார். அப்போது நடந்த நிகழ்ச்சியில், மேடையேறிய மாணவர்கள், இளையராஜாவை புகழ்ந்து பாடல்களைப் பாடினர். இசையமைப்பாளர் இளையாஜாவைப் பார்த்த மாணவர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். இதன் பின்னர், மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசினார். 1974 ஆம் ஆண்டு மூகாம்பிகை கோயிலுக்கு தான் சென்றது பற்றி பேசினார். இளையராஜாவை பார்த்த உற்சாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தனர். 

மாணவர்கள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் இளையராஜா கோபமடைந்தார். அப்போது அவர் மாணவர்களைப் பார்த்து, கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகள் என்று கூறியுள்ளார். அதன் பின்னர், பல்வேறு பாடல்களை இளையராஜா பாடினார். இசை, பாடல் எழுதுவது, இசைகோர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மாணவர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் என்று கூறிய இளையராஜா, திரைக்கு வரும் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்தான். அவரது சகோதரருடைய கட்சி பிரச்சார மேடைகளில் பாடல்களைப் பாடி வந்தவர். திரையுலகுக்கு வந்த பின்னர், அவரது ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் போட்ட விசிலே அங்கீகாரமாக அமைந்தது. ஆனால், அந்த விசில் சத்தம் கிடைக்காமலே போயிருந்தால் இன்று இளையராஜா ஏது?