கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமீபகாலமாக பிராமணர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கட்சியின் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில், தி.மு.க. நாளேடான முரசொலியும் தனது கேள்வி-பதில் பகுதியில் ‘அது மக்கள் நீதி மய்யமா, அல்லது மயிலாப்பூர் நீதி மய்யமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

நாத்திகர், பகுத்தறிவுவாதி, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் கமல் கட்சி துவங்கிய சில காலத்திலேயே அங்கு மறைமுகமாக பிராமணர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும், மற்றவர்களை தன்னிடம் நெருங்கவிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. சமீபகாலமாக அவரது கட்சியிலிருந்து வெளியேறும் சிலரும் கமல் மீது மேற்படி குற்றச்சாட்டுகளைக் கூறிவருவதை முரசொலி நாளேடு நேற்றைய கேள்வி -பதில் பகுதியில் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

கேள்வி; மக்கள் நீதி மய்யம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதே?

பதில்; டேக் ஆஃப் ஆவதற்கு முன்பே டயர்கள் எல்லாம் கழன்றோடத் தொடங்கி விட்டன. அமைப்பாளர் விலகல், பொருளாளர் ராஜினாமா என தினம் தினம் செய்திகள் வரத் தொடங்கிய நிலையில், இருக்கும் சிலரை தக்க வைக்க அரைகுறை அறிவிப்பு, ஒன்றை அவசரமாக அக்கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

 அந்த கட்சியிலிருந்து விலகிய வழக்கறிஞர் ராஜசேகர், அது மக்கள் நீதி மய்யமல்ல; மயிலாப்பூர் நீதி மய்யம் ஆகிவிட்டது எனக்கூறியுள்ளார். மயிலாப்பூர் நீதி மய்யத்தின் ஆலோசகர்களின் பட்டியலிட்டாரே பார்க்கவில்லையா?மயிலாப்பூர் நீதி மய்யம் பாஜகவுக்கு எதிராக செயல்படுமா அல்லது அதன் டீமாக விளங்குமா என முடிவெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.