கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ இயக்குனரும், நரம்பியல் நிபுணருமான சைமன் ஹெர்குலஸ் கடத்த 19 ஆம் தேதி அன்று இறந்தார்.

இதையடுத்து, இவருடைய குடும்ப பழக்கத்தின் படி கல்லறையில் இவரை புதைக்க ஏற்பாடு செய்தபோது, கொரோனாவால் இறந்த மருத்துவரை அங்கு அடக்கம் செய்ய கூடாது என அந்த பகுதியை சேர்ந்த, சிலர் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் மருத்துவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி தாக்கியதோடு, அங்கு வந்திருந்தவர்களை பலமாக தாக்கினர். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. பின் இந்த மருத்துவரின் உடல் இரவோடு இரவாக வேளங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது.

இந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் மருத்துவர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக வேதனையோடு, வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது... ரொம்ப வேதனையா இருக்கு... டாக்டர்கள் கடவுளின் அடுத்த ஸ்தானம். ஏன்னா கடவுளுக்கு மட்டும் தான் உயிரை காப்பாற்றுகிற சக்தி இருக்கு. 

இந்த கொரோனா நோய் மற்றும் இல்லை, எத்தனையோ... தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டாக்டர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து, அவங்களுக்கு வைத்தியம் பார்த்து சரி செய்கிறார்கள். 

அப்படி பட்ட டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து போய்விட்டால், அவங்களை புதைக்க இடம் தர மாட்டேன் என, கல்லை கொண்டு எறிவதும், ஆம்புலன்ஸை உடைப்பதும், மண்டையை உடைப்பதும், எந்த விதத்தில் நியாயம். 

சுடுகாடு யாருக்கு சொந்தம். அப்பறம் எங்கு கொண்டு போறது. டாக்டர்கள் வைத்தியம் பார்க்கல, நம்ப பக்கத்துல வரல, நாம் பயப்பிடும் மாதிரி அவர்களும் பயந்தார்கள் என்றால், நாம் அனைவரும் அனாதை பிணம் ஆகிவிடுவோம். அதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.

இடம் கொடுக்க மாட்டேன் என்று எப்படி சொல்ல முடியும். எங்கே போனது உங்களுடைய சமரசம். ஏன் இப்படி பண்றீங்க... ஒருமுறை அவுட் டோர் ஷூட்டிங் போகும் போது... ஒரு குரங்கு மரத்தில் ஏறப்போய் வண்டி மீது விழுந்து ஒரு குரங்கு இறந்து விட அந்த இடத்தில் 100 குரங்கு கூடி விட்டது. இரண்டு புறமும் ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டது. குரங்குகள் அனைத்தும் கண்ணீர் விட்டு அழுகிறது. கடைசியில் அந்த அடிபட்ட குரங்கை தூக்கி கொண்டு செல்கிறது மற்ற குரங்குகள். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என சொல்றாங்க இல்லையா...? அந்த குரங்கிற்கு உள்ள அறிவு ஏன் மனிதனுக்கு இல்லாமல் போனது. 

தயவு செய்து இப்படி செய்யாதீர்கள், உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன். யாராக இருந்தாலும் பிறந்தால் குழந்தை, வளர்ந்தால் மனிதன், இறந்தால் பிணம் இவ்வளவு தான். தயவு செய்து இப்படி செய்ய வேண்டாம் என கெஞ்சி கேட்டு கொள்வதாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீடியோ ஒன்றில் பேசி அதனை வெளியிட்டுள்ளார்.