இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா - விக்ரம் இணைந்து நடித்த, 'பிதாமகன்' படத்தில் ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் ஒரு நடிகராக அறியப்பட்டவர் ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான மொட்டை ராஜேந்திரன். இந்த படத்திற்கு முன் இவர் சில படங்களில் நடித்தாலும், அதில் அவர் கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு, நடிகர் ஆர்யா நடித்த, நான் கடவுள் திரைப்படத்தில் இவர் நடித்த மிரட்டலான வில்லன் வேடம், இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

இந்த படத்திற்கு பின், தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு மொட்டை ராஜேந்தரனுக்கு கிடைத்தது. வில்லன் மற்றும் காமெடி என இரு வித கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க துவங்கினார் மொட்டை ராஜேந்திரன்.

அந்த வகையில் இவர் 'பாஸ் என்கிற பாஸ்கரன், 'பானா காத்தாடி', 'உத்தமபுத்திரன்', 'ரௌத்திரம்', 'வேலாயுதம்', 'ராஜா ராணி' என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தைப் பிடித்தார். 

இந்நிலையில் இவர் 'ராபின்ஹூட்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார். முதன்முறையாக மொட்டை ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் என்பவர் இயக்கவுள்ளார். 

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை பிரபல நடிகர் விஜய்சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். இதில் முன்னணி நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு, மிரட்டியுள்ளார் மொட்டை ராஜேந்திரன். மேலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதையும் உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது 'ராபின்ஹூட்' மோஷன் போஸ்டர்.