ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக நடித்து வரும் பான் இந்தியா படமான பாரடைஸ் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார்.
Nani's Paradise movie update : மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் படம் 'பாரடைஸ்'. இப்படத்தில், நேச்சுரல் ஸ்டார் நானியின் 'ஜடேலா' லுக்கிற்கு கிடைத்த வரவேற்பு அடங்குவதற்குள், நடிகர் மோகன் பாபு வில்லனாக விண்டேஜ் லுக்கில் தோன்றும் தகவல் வெளியாகியுள்ளது. 'ஷிகாஞ்ச் மாலிக்' ஆக மோகன் பாபு நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான மோகன்பாபு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார்.
பாரடைஸ் படத்தில் இவர் வில்லனா?
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும் மோகன் பாபு, தனது கம்பேக்கிற்கு ஏற்ற சக்திவாய்ந்த வில்லன் பாத்திரத்தில் 'பாரடைஸ்' படத்தில் மிகுந்த உற்சாகத்துடன் இணைந்துள்ளார். தனக்காக எழுதப்பட்ட இந்த கதாபாத்திரத்தின் ரசிகராகிவிட்டதாக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவிடம் மோகன் பாபு தெரிவித்தாராம். ஷிகாஞ்ச் மாலிக் என்ற வில்லன் தோற்றம், நடிகர் மோகன் பாபுவுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் உள்ளது. 'டயலாக் கிங்' என்ற அவரது பட்டப்பெயருக்கு ஏற்ற ஸ்டைலையும், மேனரிசத்தையும் இந்த கதாபாத்திரம் உறுதி செய்கிறது.

இந்தப் படத்தில் அதிகம் பேசப்படும் கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இப்படம் 2026 மார்ச் 26 அன்று எட்டு மொழிகளில் பான்-வேர்ல்ட் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்திய சினிமாவை உலகளவில் கொண்டாடும் ஒரு வெளியீடாக இது அமையும். சி.எச். சாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எடிட்டராக நவீன் நூலி பணியாற்றி உள்ளார். எஸ்’எல்.வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரித்து உள்ளார்.
ஏற்கனவே ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்த தசரா திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர்கள் இருவரும் பாரடைஸ் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால், இது அதிக ஹைப் உள்ள படமாக மாறி உள்ளது.
