வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தான் கட்சிப் பணி என்றும் மற்ற நாட்களில் தன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்றும் கமல் கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்பாக கூறிவிட்டதாக சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வாக்குகளை பெற்று அசர வைத்தது கமல் கட்சி. ஒரு சில தொகுதிகளில் அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் கோவை மண்டலத்தில் 3வது இடத்திற்கு வந்ததுடன் 2வது இடம் பிடித்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தோற்கவும் கமல் கட்சி வேட்பாளர்கள் காரணமாக இருந்தனர். திமுக, அதிமுகவிற்கு பிறகு அதிக வாக்குகள் பெற்ற கட்சியாகவும் மக்கள் நீதி மய்யம் முன்னிலைப்படுத்தப்பட்டது. 

இதனை அடுத்து பெருமையாக செய்தியாளர்களை சந்தித்து தாங்கள் சாதித்துவிட்டது போல் பேட்டி எல்லாம் அளித்தார் கமல். உடனடியாக சுற்றுப்பயணத்திற்கு எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். கமல் கட்சியை வலுப்படுத்த தீவிரமானார். ஆனால் இந்த நிலையில் தான் பிக்பாஸ் 3 சீசனில் கமலை வளைத்துப் போட்டது விஜய் டிவி. இதன் பின்னணியில் அந்த கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் இருக்கிறார் என்கிறார்கள். 

அவர் தான் பிக்பாஸ் சீசனை முடித்துவிட்டு கட்சிப் பணிகளுக்கு செல்லலாம் என்று கூறிவிட்டதாகவும் பேசப்படுகிறது. இதன் பிறகு பிக்பாசில் மூழ்கிய கமல் கடந்த ஒரு மாதமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வழக்கமான அறிக்கைகள் கூட தாமதமாகவே வந்தன. இதனால் கமல் அரசியலை டைம் பாஸாகத்தான் வைத்திருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கமலை கெஞ்சி கூத்தாடி நேற்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வைத்துள்ளனர். முதலில் கமல் நேரடியாக சென்று மூன்று கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாகஇருந்தது. ஆனால் கமல் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்ற கூறிவிட அவரது கட்சி நிர்வாகிகள் அந்த கூட்டத்தை வீடியோ கான்பிரஸ் மூலமாக சென்னையில் இருந்தே கமலை பங்கேற்கச் செய்தனர். 

இது குறித்து விசாரித்த போது தற்போதைக்கு அரசியலில் கமல் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றும் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் என்றும் சொல்கிறார்கள். மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான் கட்சிப்பணி என்றும் அப்போது தன்னை வந்து நிர்வாகிகள் சந்தித்தால் போதும் என்றும் கமல் கண்டிப்பாக கூறிவிட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.