கைதேர்ந்த மேக் அப் கலைஞர்கள் பலர் முயன்றும் நடிகை சமந்தாவை 70 வயது பாட்டியாகக் காட்டும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால், அந்த கேரக்டருக்கு ஒரிஜினல் பாட்டி ஒருவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

கொரியன் படத்தின் தெலுங்கு உல்டாவான ‘ஓ பேபி...எந்த சக்ககவுன்னாவே’ என்ற படத்தில் இளம் வயது சமந்தாவாகவும், 70 வயது பாட்டியாகவும் சமந்தாவே நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

2014-ல் வெளியான ‘மிஸ் கிரான்னி [miss granny] என்ற அந்தப்படம் அதிரிபுதிரி வெற்றிப்படமாகும். கதை இதுதான் விதவையான ஒரு பாட்டி விநோதமான போட்டோ ஸ்டியோ ஒன்றில் புகைப்படம் எடுக்கும்போது திடீரென 20 வயது நங்கையாக மாறிவிடுகிறார். முதலில் திகைத்தாலும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அவ்வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறார். அந்த கிழட்டு மிஸ்ஸை இரண்டு இளவட்டப்பயலுகள் துரத்தித்துரத்திக்காதலிக்கிறார்கள். 

இதனை ரீமேக் செய்து, தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கப்போகும் ஒரு படத்தில் 70 வயது பாட்டியாக துணிந்து நடிக்க சம்மதித்திருந்தார் சமந்தா. ‘ஓ பேபி...எந்த சக்ககவுன்னாவே’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் சமந்தாவுக்கு பல மேக் அப் கலைஞர்கள்  மூலம் பாட்டி மேக் அப் போட்டுப்பார்க்கப்பட்டது. நத்திங் டூயிங். செம பார்ட்டியை பாட்டியாக மாற்றும் அந்த அநியாய முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடியவே, ஒரு லட்சுமிப் பாட்டி 70 வயது சமந்தாவாக நடிக்க, 20 வயது பாத்திரத்தில் மட்டும் நடிக்கிறார் சமந்தா.