சமூகவலைத்தளங்களில் கிளம்பிய கடுமையான விமர்சனங்களை அடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்த ’மெரினா புரட்சி’ திரைப்பட குழுவினர், யாரையும் கவுரவிக்காமல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டனர். சர்ச்சைக்குப் பயந்து சீமான் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இருந்த தடையை நீக்கக்கோரி 2017ல் நடந்த போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான படம் 'மெரினா புரட்சி'. நாச்சியாள் பிலிம்ஸ் என்ற பெயரில் எம்எஸ் ராஜ்-நாச்சியாள் சுகந்தி தம்பதியினர் உருவாக்கிய படம் குறித்த உரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று மாலை பிரசாத் லேப்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில் நடத்தப்படுவதாக பிறகு அந்த நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் கூறியது. இந்த அழைப்பிதழ் சமூகவலைத் தளங்களில் பரவியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமையேற்ற குழுவினர் யாரும் இல்லை என்பதாலும், மக்கள் திரளாக கலந்துகொண்ட போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் என யாரையும் அடையாளப்படுத்தமுடியாது என்று கூறி பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.யார் அந்த 18 நபர்கள், 18 பேர்கள் மட்டுமே ஒருங்கிணைத்த போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் இல்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால், படவிழாவில் யாரும் கவுரவிக்கப்படவில்லை.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு, பிரசாத் லேப் அரங்கத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் 18 இளைஞர்கள், 10 லட்சம் மக்கள் என்ற வார்த்தைகள் மறைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இயக்குநர்கள் பார்த்திபன், ராஜு முருகன், எழுத்தாளர்கள் ஜோ டி குரூஸ், பத்திரிகையாளர்கள் ஏகலைவன், பாரதிதம்பி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் வரவில்லை.

நிகழ்வில் பேசிய இயக்குநர் எம்எஸ் ராஜ்,’ நான் பணம் சம்பாதிக்கவுள்ளதாக பலர் முகநூலில் எழுதுகிறார்கள். பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக இந்த படத்தை எடுக்கவில்லை.'இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வாங்க நெருக்கடிகளை சந்தித்தேன், பீட்டா நிறுவனம் 100கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தில் நானும், என் மனைவியும் ஆஜராகவேண்டியுள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஏமன் உள்ளிட்ட 11 நாடுகளில் தமிழர்களை இந்த படத்தை பார்த்துள்ளனர். இந்தியாவில் படத்தை திரையிட யாரும் முன்வரவில்லை,'' என்றார்.