ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மண்டி  என்ற செயலி அறிமுக விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரின் வீடு மற்றும் அலுவலகத்தை வணிகர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் விஜய் சேதுபதி,  இவர்,  நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள இவர்,  விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.  சமீபத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மண்டி என்ற செயலியை அறிமுகம் செய்யும் விளம்பரத்தில் நடித்துள்ளார்.  அதில்,  இனி பலசரக்கு கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை,  மொபைல் போனில் மண்டி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும் தேவையான பொருட்கள் வீட்டுக்கே வந்து சேரும்.  என விளம்பரத்தின் வாயிலாக அவர் தெரிவித்துள்ளனர்.

இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.  இது சிறு மளிகை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அத்துடன் தான் நடித்துள்ள அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கூடாது, என்பதுடன், அந்த விளம்பரத்தில் இருந்து அவர் பின் வாங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து தெரிவித்திருந்த  வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்திருப்பது எங்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல் அவர் இந்த விளம்பரத்தில் நடித்த்தை திரும்ப பெற வேண்டும், ிஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்ததின் மூலம், அவர் மீதிருந்த  மதிப்பு  சுத்தமாக குறைந்துவிட்டது என ஆதங்கம் தெரிவித்தனர். மேலும்,  விஜய்சேதுபதி விளம்பரத்திலிருந்து பின்வாங்காவிட்டால் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் அலுவலகம் மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்  அறிவித்திருந்தனர். 

இதனையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் அறிவித்தபடி, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  ஏராளமான வணிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.  முற்றுகையில் ஈடுபட்டவர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் , விஜய்சேதுபதிக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர்.