பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த மாதம் 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அதன் பலனாக படிப்படியாக எஸ்.பி.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையால் மயக்கநிலையில் இருந்து முற்றிலும் சீரான நிலைக்கு வந்தார். பல நாட்களாக படுக்கையில் இருந்ததால் எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் வெளியிட்ட வீடியோவில், அப்பாவின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் தற்போது அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை தொடர்வதாகவும், அவர் பேச நினைப்பதை எழுதி காட்டுவதோடு, ஐபேடில், கிரிக்கெட் , டென்னிஸ் போன்றவற்றை பார்த்து வருவதாக தெரிவித்திருந்தார். 


இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை மகிழ்ச்சியடையச் செய்த நிலையில், எஸ்.பி.பி. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 25 நாட்களாக செயற்கை சுவாசம மற்றும் எக்மோ கருவி பொருத்தப்பட்டிருந்ததால் அவருடைய நுரையீரல் முன்னேற்றம் தாமதம் அடைந்துள்ளது. அதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் எஸ்.பி.பிக்கு நுரையீரல் கிடைக்கும் வரை இதே சிகிச்சை முறையை பின்பற்றவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.