லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியது. 

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்கலாம் என அரசு அறிவித்து, 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்க படவேண்டும் என கூறியுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனாவில் பிரச்சனை குறையாமல் விஸ்வரூபம் எடுத்து வருவதால், திரையரங்குகள் திறக்க பட்டாலும் ரசிகர்கள் வருவார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனவே, சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் ஓடிடியில் வெளியிட முடிவு செய்து விட்டனர் தயாரிப்பாளர்கள். எனினும், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பதில் படக்குழு, மற்றும் விஜய் ஆகியோர் மிகவும் தெளிவாக உள்ளனர். அதே நேரத்தில், எப்போது வெளியாகும் என்கிற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில்,  'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவருடைய ட்விட்டர் பக்கத்தில், விரைவில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவரது ட்விட் இதோ...