பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது.  இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

தனுஷ் எழுதிய பாடல் முதலில் ஒரு மார்க்கமாக இருந்தாலும், அவரது டைலாக்கைப் போல கேட்க, கேட்க ரசிகர்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்தது. "ரவுடி பேபி" பாடல் யூ-டியூப்பில் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் பிரபலமானது. முதன் முதலாக 250 மில்லியனுக்கு மேல் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் என்ற பெருமையை பெற்றது. அதன் பின்னர் யூ-டியூப்பிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமையை தட்டிச் சென்ற "ரவுடி பேபி", சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்தது. 

இந்த பாடல் மட்டுமல்லாது, அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ கூட யூ-டியூப்பில் லட்சணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் வரை 50 கோடி பார்வையாளர்களைக் கடந்து மைக்கல் பதித்த இந்த பாடல், தற்போது 70 கோடி பார்வையாளர்களை கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற பாடல் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.