விஷாலின் மார்க் ஆண்டனி.. 6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு? - நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு!
பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷால் மற்றும் நடிப்பு அசுரன் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது மார்க் ஆண்டனி திரைப்படம்.

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஒரு கம்பேக் திரைப்படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் அமைந்திருக்கிறது என்று சினிமா ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்காக சென்சார் போர்டு அதிகாரிகள் சுமார் 6.5 லட்சம் ரூபாய் கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் மொழியில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது ஹிந்தியில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் தான் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான ஹிந்தி சென்சார் போர்டிடம் அவர் சென்ற பொழுது மும்பையில் உள்ள சென்சார் போர்டு அதிகாரிகள் இந்த படத்தை ஹிந்தியில் திரையிட மூன்று லட்சம் ரூபாயும், சான்றிதழ் வழங்குவதற்கு 3.5 லட்சம் ரூபாயும் லஞ்சமாக கேட்டதாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவான ஒரு விளக்கத்தையும், சில வங்கி கணக்குகள் குறித்த சில தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசிய பொழுது தனது சினிமா பயணத்தில் இப்படி ஒரு சூழலை அவர் இதுவரை சந்தித்ததில்லை என்றும்.
ஆனால் தனக்கு பணம் கொடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் மகாராஷ்டிராவின் முதல்வருக்கும், பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்கும் இதைத் தான் எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என்று பல பேரின் உழைப்பு இப்படி ஊழலுக்கு வீண் போவதா என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.