புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு படங்கள் அவ்வப்போது பாலிவுட்டில் வெளிவந்து வெற்றி பெற்று வருகிறது.

 மேரிகோம், தோனி, தங்கல் ஆகிய படங்கள் இதற்கு  உதாரணம். இந்த படங்கள் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது. மேலும்  விரைவில் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகவுள்ளது இதில் சச்சின் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்த்து உள்ளது.

இந்நிலையில் உலக அளவில் பிரபலமான தமிழக விளையாட்டு வீரர்கள் குறித்து யாராவது திரைப்படம் எடுக்க மாட்டார்களா? என்று தமிழ் ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில் தமிழர்களின் ஆசையை பூர்த்தி செய்ய தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா களமிறங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கப்பதக்கம் கூட கிடைக்காத ஏக்கத்தை பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்று பூர்த்தி செய்தவர் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாரியப்பன் தனது மன உறுதியாலும், விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். இவருடைய  வாழ்க்கை வரலாறு படத்தைத்தான் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ்  ஏற்கனவே இவர் '3', 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே...

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைக்கவுள்ளார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் மாரியப்பன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.