விமான நிலையத்திலிருந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரபல மராத்தி பின்னணிப் பாடகி பயங்கர விபத்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த அவரது கணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாசிக் நகரை சொந்த ஊராகக் கொண்டவர் பாடகி கீதா மாலி. தனி ஆல்பங்கள் பலவற்றில் பாடியுள்ள கீதா, பல மராத்திப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார். தனது கணவர் ரவி மால்யுடன் அமெரிக்கா சென்றிருந்த அவர் நேற்று விமான நிலையத்திலிருந்து மும்பை,ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக தனது சொந்த ஊரான நாசிக்குக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களது கார் கட்டுப்பாடு இழந்து சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியதில் கீதாவும் அவரது கணவரும் படுகாயமுற்றனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே கீதா மாலி இறந்து விட தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது கணவர் ரவி மாலி உயிருக்குப் போராடி வருகிறார்.

கீத் கங்கா மியூசிக்கல் பேண்ட் என்ற பெயரில் தனி இசைக்குழுவும் வைத்திருந்த கீதா, திரைப்பாடல்கள், தனி ஆல்பங்கள் போக நிறைய மராத்தி பக்திப் பாடல்களும் பாடியுள்ளார்.