வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தால் அதை நிரூபித்துக் காட்டுவேன் என்றும் இரவோடு இரவாக வாக்குப் பெட்டியை மாற்றித்தான்  தேனியில் ரவீந்திரநாத் குமாரை வெற்றிபெற வைத்துள்ளனர்  என்றும் நடிகர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தனது முய்ற்சியில் சற்றும் மனம் தளராமல் டெல்லி உச்சநீதி மன்றம் சென்றுள்ளார்  திண்டுக்கல் தொகுதியில் 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடம்பிடித்த மன்சூர் அலிகான்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்குப் பதிவு இயந்திரத்தை என்னிடம் கொடுங்கள். நீங்கள் ஒரு சின்னத்தில் வாக்களித்தால், வேறு சின்னத்தில் அந்த வாக்கு விழுவது போல நான் மாற்றிக் காட்டுகிறேன். 50 பேருக்கு மேல் அனைவரின் ஓட்டுக்களும் ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்குச் செல்வது போல செய்ய என்னால் முடியும். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டனர். அதனால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளேன். விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன். அனுமதி கிடைக்கும்பட்சத்தில் உங்கள் முன்னிலையிலேயே அதை செய்து காட்டுகிறேன்” என்று கூறினார்.

“374 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளன. அங்கு தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், தேர்தல் ஆணையம் ஒன்றுமே செய்யவில்லை. கடைகளில் இருந்தெல்லாம் வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கைப்பற்றுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியவர், தேனியில் மட்டும் வெற்றி பெற்ற ஓபிஎஸ்சின் மகன் தோல்விதான் அடைந்திருந்தார். ஆனால் இரவோடு இரவாக வாக்குப் பெட்டிகளை மாற்றி அவரை ஜெயிக்கவைத்தனர்’ என்றார்.