முன்னணி நடிகர்களின் பட டிக்கெட்டுகளை ரெண்டாயிரத்துக்கும் ஐயாரத்தும் விற்பது என்பது விபச்சாரத்துக்குச் சமம். ரசிகனின் கோவணத்தை உருவி சம்பாதிக்காதீர்கள்’ என்று மிகக் காட்டமாகப் பேசினார் சர்ச்சை மன்னன் மன்சூர் அலிகான். 

ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்பூல் சல்மான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’உன் காதல் இருந்தால்’. இந்த பட விழாவில் நடிகர் மன்சூர் அலி கான் கலந்து கொண்டு பேசினார்.

இன்றைய நிலையில் சில நல்ல படங்கள் கூட ஓடுவது இல்லை. காரணம் மக்களிடம் காசு இல்லை. செயினை பறித்துக் கொண்டு போறான் படம் பார்க்க, தண்ணியடிக்க, செல்போனை பறித்துக் கொண்டு போகிறான். நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எல்லாம் சூறையாடி சூறையாடி இருக்கும் நிலையில் இந்த படங்கள் வெளியாகின்றன. மக்கள் சினிமாவை வாழ வைக்கிறார்கள்

பெரிய படங்களுக்கு ரூ. 2,000, ரூ. 3,000 கொடுத்து காலை 4 மணி ஷோ, 5 மணி ஷோ வைக்கிறார்கள். சினிமாவை எங்கு கொண்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. ரூ. 5,000, ரூ. 3,000 கொடுத்து இவர்கள் படத்திற்கு போகிறார்களா, ப்ராஸ்டிடியூஷனுக்கு போகிறார்களா?. விலை மாதுவிடம் போகத் தான் அவ்வளவு பணம் கொடுப்பார்கள். சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறது?. எதற்காக ரூ. 5,000, ரூ. 2.000?.

ரூ.2 ஆயிரம் கோடி அல்லது ரூ. 200 கோடியில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் என் மக்களின் காசு புடுங்குவதற்கு, கோவணத்தை அவிழ்ப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. நாளை முதல் தியேட்டர்களில் ரூ. 160, ரூ. 60க்கு தான் படங்களை ஓட்டணும். கூடுதல் காசு வாங்கினால் எந்த தியேட்டராக இருந்தாலும் நேரில் வந்து உதைப்பேன் என்று சவால் விடுகிறேன்.

ஏழை மக்கள் 1 ரூபாய், 2 ரூபாய், 60 காசு கொடுத்து தான் எம்.ஜி.ஆரை. முதல்வர் ஆக்கினார்கள். ரூ. 2,000 கொடுத்து பார்த்தவனை முதல்வர் ஆக்க மாட்டார்கள். காழ்ப்புணர்ச்சியாலோ, யாரையும் திட்ட வேண்டும் என்றோ இதை சொல்லவில்லை. என் மக்கள் கோவணத்தை அவிழ்த்து காசு கொடுக்க இனி நான் விட மாட்டேன். தலைவா, தலைவா என்று நெஞ்சில் தாங்கும் ரசிகனுக்கு படத்தை சும்மா காட்ட வேண்டும். சும்மா காட்டாவிட்டால் ரூ. 160க்கு காட்ட வேண்டும். எக்ஸ்ட்ரா வாங்கக் கூடாது. டிக்கெட்டுக்கு மேல் யாரும் எக்ஸ்ட்ரா வாங்கக் கூடாது என்றார் மன்சூர் அலி கான்.