தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியின் நான்காவது படமான ‘அசுரன்’ ல் பிரபலமான மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார். இச்செய்தியை மிகவும் பரவசத்துடன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 95ல் மலையாளத்திரையுலகில் அறிமுகமான மஞ்சு வாரியர் எத்தனையோ முன்னணி இயக்குநர்கள் அழைத்தும் தமிழ்ப்படங்களில் நடிக்காதவர்.

கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரின் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர் ‘98ல் திலீப்பை மணந்து அடுத்த ஒரே வருடத்தில் மணவாழ்க்கையை முறித்துக்கொண்டார். அத்தோடு படங்களில் நடிப்பதையும் நிறுத்திக்கொண்ட அவர் 15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நடித்தபடம் தான் 2014ல் வெளிவந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’. இதன் தமிழ் ரீமேக் தான் ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’.

இப்படத்தின் ரீ எண்ட்ரிக்குப் பின்னர் மலையாளப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த மஞ்சு வாரியர் வெற்றிமாறன் சொன்ன கதையைக் கேட்டு ‘அசுரன்’ படத்தில் நடிக்க சம்மதித்தார். மஞ்சு வாரியருக்கு இப்போது வயது 40. என்னது இந்த வயசுல தனுஷுக்கு ஜோடியாகவா என்று சஞ்சலப்படவேண்டாம். தனுஷின் அக்காவாகவே நடிக்கிறார் மஞ்சு. இப்படத்தில் தனுஷுக்கு அநேகமாக ஜோடி இல்லை.

இவரது வருகையால் பூரிப்படைந்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்றும் இளமையான மஞ்சு வாரியர் ‘அசுரனில் ஐக்கியமாகியுள்ளார். அவரோடு இணைந்து நடிக்கவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்’என்று பகிர்ந்துள்ளார்.