நடிகை மஞ்சிமா மோகன் தான் உடல் எடை அதிகரித்ததால் பல்வேறு உருவ கேலிகளை எதிர்கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Manjima Mohan weight issues : மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன். பின்னர் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, 2015 இல் வினீத் சீனிவாசன் எழுதி, ஜி. பிரஜித் இயக்கிய 'ஒரு வடக்கன் செல்ஃபி' படத்தின் மூலம் மீண்டும் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த மஞ்சிமா, அச்சம் என்பதை மடமையடா, தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தார். இவர் உடல் எடை குறித்து பல்வேறு விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் மஞ்சிமாவுக்கு எதிராக பலர் எதிர்மறையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இதுபோன்ற உடல் எடை குறித்த விமர்சனங்கள் தன்னை மனரீதியாக பாதித்ததாகவும், ஆனால் இப்போது தான் நலமாக இருப்பதாகவும் மஞ்சிமா கூறுகிறார். முன்பு வாழ்க்கையில் ஒரு போராட்டக் கட்டம் இருந்ததாகவும், சில ஸ்டைலிஸ்டுகளின் வார்த்தைகள் காரணமாக தனக்குள் பாதுகாப்பின்மை ஏற்பட்டதாகவும் 'ஸ்டே ட்யூன்ட் வித் ரம்யா' என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மஞ்சிமா கூறி உள்ளார்.

உடல் எடை பிரச்சனை குறித்து மஞ்சிமா ஓபன் டாக்
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு பிசிஓடி இருந்தது. கொஞ்சம் எடை கூடியபோது, நான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்தேன். பிசிஓடியைக் குறைக்க வேண்டியிருந்தது. எப்படியாவது எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன், அறுவை சிகிச்சை மூலம் எடையைக் குறைக்க மருத்துவர்களைச் சந்தித்திருக்கிறேன். உடல் எடைதான் மிகப்பெரிய பிரச்சினை என்பது போல எல்லோரும் பேசுகிறார்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சினிமா என் வேலை மட்டுமே. எடையைக் குறைத்து வேறொரு தோற்றத்திற்கு வந்தால், ஒருவேளை இன்னும் சில படங்கள் கிடைக்கலாம். அதன் பிறகு யாரும் நாம் எப்படி இருக்கிறோம் என்று விசாரிக்க மாட்டார்கள். வேலை சம்பந்தமில்லாத வேறு இலக்குகள் எனக்கு உள்ளன” என்று மஞ்சிமா மோகன் கூறினார். இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கிய 'பூ' தான் மஞ்சிமாவின் கடைசிப் படம். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இது திகில் படமாகும்.
