மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்துள்ள நடிகை மஞ்சிமா மோகன் ஜெயலலிதாவாக வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார்.   தமிழில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தாலும் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி மஞ்சிமாவுக்கு அதிகமாக வாய்ப்புகள் வரவில்லை. சத்ரியன் என்கிற படத்தில் நடித்தார், அதுவும் சரியாக ஓடவில்லை. இந்தநிலையில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்த தேவராட்டம் என்கிற படத்தில் மஞ்சிமா நடிக்க உள்ளார். இந்த படத்தை கொம்பன் இயக்கிய முத்தையா இயக்குகிறார். இதனை தொடர்ந்து இந்தியில் கங்கனா ரனாவத் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்கில் மஞ்சிமா நடிக்க இருக்கிறார். இந்த குயின் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக்காக உள்ளது.இந்த நிலையில் மஞ்சிமா இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின் போது எந்த மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மஞ்சிமா, தனக்கு குடும்ப பாங்கான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றே ஆசை என்றார். கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்றாலும் ஹோம்லி கேரக்டரையே தான் விரும்புவதாக மஞ்சிமா தெரிவித்துள்ளார்.  மேலும் கீர்த்தி சுரேஷ் மாதிரி ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க சொன்னால் யாராக நடிக்க ஆசை என்று மஞ்சிமாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மஞ்சிமா தனக்கு ஜெயலலிதாவாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு கிடைத்த பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றை சினிமாவிலாவது அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் மஞ்சிமா தெரிவித்துள்ளார்.