கல்கியின் பிரசித்தி பெற்ற  ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியான முடிவை எடுத்திருக்கும் மணிரத்னம் அப்படத்தில் மிக விரைவில் முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவை முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம்.

சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுத்தாளர்கள் கல்கியால் 5 பாகங்களாக எழுதப்ப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப்படமாக்கப்போவதாக எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை ஆசைப்படாத சினிமா பிரபலங்களே இல்லை. இந்த நாவலைப் படமாக்கும் அறிவிப்பு வராத ஆண்டுகளே தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம்.

இதன் தொடர்ச்சியாக, சுமார் பத்து ஆண்டுகாலமாக இயக்குநர் மணிரத்னம்  கமல் தொடங்கி அரவிந்தசாமி, விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோருடன் சில இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களையும் இணைத்துக்கொண்டு மிக விரைவில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

அந்நிலையில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு ரஜினியின் மகள் சவுந்தர்யா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரியலாக தயாரிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து ஒரு டீஸரையும் வெளியிட்டார். இச்செய்தியால் படு அப்செட்டுக்கு ஆளான இயக்குநர் மணிரத்னம் தற்காலிகமாக அமைதி காத்தார்.

அந்த அமைதி தற்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஐந்து மொழிகளில் தயாராகவிருக்கும் இப்படத்தின் வியாபாரத்தை சவுந்தர்யாவின் பொன்னியின் செல்வனால் எதுவும் செய்யாது என்றும் எனவே படத்தை இயக்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்கவேண்டியதில்லை என்று அவரது நண்பர்கள் வட்டாரமும், படத்தைத் தயாரிக்கவிருக்கும் லைகா நிறுவனமும் நம்பிக்கையூட்டியதை ஒட்டி மணி திரைக்கதையை மீண்டும் தூசுதட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

இப்படத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விஜய் சேதுபதி,விக்ரம், சிம்பு, அரவிந்தசாமி ஆகியோருடன் முன்னாள் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன்பாபுவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். மணிரத்னத்தின் இந்த முடிவால் சவுந்தர்யா வட்டாரம் சற்றே அதிர்ந்துபோயிருக்கிறது.