’பொன்னியின் செல்வன்’பட நடிகர்கள் லிஸ்ட் போரடிச்சிப் போச்சி. கொஞ்சம் புதுசா நியூஸ் போடுங்கப்பா’என்று சொல்வதுபோல் இயக்குநர் மணிரத்னம் லொகேஷன்களை இறுதி செய்வதற்காக தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கு மணிரத்னம் லொகேஷன் வேட்டையாடும் படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்’படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தாய்லாந்தில் துவங்கவுள்ளது. 100  நாட்கள் ஒரே மூச்சாக நடைபெறவுள்ள இதன் முதல் ஷெட்யூலில் விக்ரம்,விஜய் சேதுபதி,ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரபூர்வமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தாய்லாந்து பறந்த இயக்குநர் மணிரத்னம், அங்கு ஏற்கனவே உதவி இயக்குநர்கள்,கலை இயக்குநரின் உதவியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் பார்த்து வைத்திருந்த லொகேஷன்களை ஓ.கே.செய்வதற்காக ஒவ்வொரு இடமாகப் பார்வையிட்டு வருகிறார். அவர் தாய்லாந்து நாட்டு லொகேஷன் மேனேஜர்களுடன் படகிலும் தரைமார்க்கமாகவும் பயணிக்கும் படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. ‘பொன்னியின் செல்வன்’தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டு அடுத்த சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.