படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மம்முட்டி தன்னை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் செம ஹாட் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்துக்குக் கீழே ‘இரண்டு முதல்வர்கள் சந்தித்துக்கொண்டபோது’என்று கேரள மக்கள் உற்சாகமாகக் கமெண்ட் அடித்துவருகின்றனர்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்றுமுறை வென்றுள்ள மலையாள திரையுலகின் ‘மெகாஸ்டார்’ மம்மூட்டி, தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பல சாதனைகளைப் படைத்த அவர்,மலையாள அரசியலை மையப்படுத்தி உருவாகும் ‘ஒன்’ என்ற படத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடிக்கிறார். ‘சிறகொடிஞ்ச கினாவுகள்’ படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.

இதற்காக தனது படப்பிடிப்பின் நடுவே, மரியாதை நிமித்தமாக பினராயி விஜயனை நேரில் சந்தித்திருக்கிறார் மம்மூட்டி. மம்மூட்டி தன்னை வந்து சந்தித்த விஷயத்தை, கேரள முதல்வரும் ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, பினராயி விஜயனாக மம்முட்டி நடிக்கும் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் பினராயி விஜயன் போன்ற மேக்-அப்பில், கம்யூனிஸ்ட் கொடிகள் கொண்ட பின்புலத்தில், மம்மூட்டி சிரிப்பது போன்று இடம் பெற்றுள்ளது. மேலும், ‘மிரட்டலும், பேரம் பேசுவதும் எங்களிடம் நடக்காது’ என்ற வாசகமும், ‘பினராயிலே சகாவ் பேரு விஜயன்’ என்ற தலைப்பு வாசகமும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான ’யாத்ரா’ படத்தில், முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக நடித்திருந்தார் மம்மூட்டி. இவரது நடிப்பு ஒய்.எஸ்.ஆரை தத்ரூபமாக கொண்டு அமைந்திருந்தாக ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது அதே பாணியில் பினராயி தோற்றத்திலும் மம்முட்டியின் கெட் அப் அசத்தலாக உள்ளதால் மம்முட்டியையும் ஒரு முதல்வராகக் கொண்டாடத் துவங்கியுள்ளனர் கேரள மக்கள்.