மலையாள திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் அன்னா பென். கும்பலங்கி நைட்ஸ், ஹெலன் உள்ளிட்ட படங்கள் மூலமாக பிரபலமானவர். அன்னா பென் நடிப்பில் வெளியான நடிப்பில் வெளியான கப்பெல்லா திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் கன்னட ரீமேக்கில் தான் குட்டி நயன் அனிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் அன்னா பென் தனக்கு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கொடுமை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், சோசியல் மீடியாவில் அடிக்கடி கோபத்தை காட்டுபவள் நானல்ல. ஆனால் இன்று நடந்த விஷயத்தை என்னால் சாதாரணமாக விட்டு விட முடியவில்லை. கூட்டம் இல்லாத லுலு சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு இளைஞர்கள் என்னை பின் தொடர்ந்து வந்து, எனது பின்னால் தட்டினார்கள். நான் அப்போது அதிர்ச்சி ஆகிவிட்டேன். என்னால் எந்த எதிர்வினையும் செய்ய முடியவில்லை. 

அதை பார்த்த அருகில் இருந்த என் சகோதரி வேகமாக வந்தார். என்னிடம் நீ ஓ.கோ.வா? எனக்கேட்டார். அவர்கள் வேண்டுமென்றே தான் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. என் அம்மாவும், சகோதரரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால் நாங்கள் பில் போடும் இடத்திற்கு சென்றோம். அப்போது அந்த நபர்கள் எங்கள் அருகே வந்தார்கள். நான் நடித்த படங்களின் பெயர்களைப் பற்றி கேட்டார்கள். நான் அப்போது பதில் எதுவும் பேசவில்லை. இதை இங்கு எழுதும் போதும் எனக்கு தோன்றுகிறது.  இப்படி சொல்லியிருக்கலாமே, செய்திருக்கலாமே என்று பல யோசனை வருகிறது. 

பெண்ணாக இருந்து சோர்ந்துவிட்டேன். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எல்லாம் கவனமுடன் இருக்க வேண்டியுள்ளது. குனியும் போதும், திரும்பும் போதும் உடையை கவனிக்க வேண்டியுள்ளது. என் அம்மா, சகோதரியை நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஆண்கள் எங்களது பாதுகாப்பை பறித்துவிட்டீர்கள். எப்போதாவது நீங்கள் பெண்களிடம் மோசமாக நடந்திருந்தால் நரகம் தான் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.