கொரோனாவால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அமிதாப் பச்சன், தமன்னா, நிக்கி கல்ராணி, இயக்குநர் ராஜமெளலி, டாக்டர் ராஜசேகர் குடும்பத்தினர் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளனர். இருப்பினும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த போதும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஓட்டுமொத்த இசையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தற்போது தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் மலையாள படமான ஆடுஜீவிதம் படத்திற்காக மொத்த குழுவும் ஜோர்டான் பாலைவனத்திற்கு சென்று கிட்டதட்ட 3 மாதங்கள் அங்கு சிக்கித்தவித்தது. கொரோனா நெருக்கடியால் திடீரென விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் மொத்த குழுவும் பாலைவனத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதன் பின்னர் மத்திய அரசு அனுப்பிய தனி விமானம் மூலமாக ஓட்டுமொத்த படக்குழுவும் கடந்த மே மாதம் 22ம் தேதி நல்ல படியாக வீடு கொச்சி திரும்பியது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகே பிரித்விராஜ் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று தனக்கு கொரோனா பாசிட்டிவ் என பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: பீட்டர் பாலை பிரிந்துவிட்டேனா?... உண்மையை உருக்கமாக வெளிப்படுத்திய வனிதா...!

பிரித்விராஜ் மலையாளத்தில் ஜன கண மண என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் முதலில் இயக்குநருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ப்ரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.