மலையாள நடிகை கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நடிகர்திலீப் சிறையில் உள்ள நிலையில்,  மிகபெரிய பட்ஜெட்டில் உருவான அவர் நடித்த ‘ராமலீலா’ திரைப்படம் நேற்று எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசானது.

இந்த திரைப்படத்தை காண காலை முதலே திலீப்பின் ரசிகர்கள் திரையரங்குகள் முன் கூட்டமாக காத்திருந்தனர்.

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கடந்த 80 நாட்களுக்கு மேலாக அங்கமாலி சிறையில் உள்ளார்.  இதனால், திலீப்நடித்த ரூ.15 கோடியில் உருவான ‘ராம்லீலா’ திரைப்படம் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர்களும், திரையுலகத்தினரும் காத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பெரிய அளவுக்கு விவாதங்கள் நடந்தன.

இந்த திரைப்படம் வெளியிடும் போது, திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருபிரிவினர் திரைப்படத்தை திரையிடாவிடாமல் தடுக்கலாம் என பேசப்பட்டது. இதனால், பாதுகாப்பு தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கிடையே நடிகர் திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியார் நடித்த ‘உதஹரனம் சுஜாதா’ திரைப்படம்(தமிழில் அம்மா கணக்கு) நேற்று வெளியானது. நடிகர் திலீப்பின் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பிரசாரம் ஒருபுறம் சென்று வரும் நிலையில், அதற்கு மஞ்சுவாரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“இந்த திரைப்படம் ஒரு நடிகர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஏராளமானோர் வாழ்க்கை தொடர்பானது, இதில் தனிநபர்களின் விருப்பு வெறுப்பை ஒதுக்கிவைக்க வேண்டும்’’ என்று மஞ்சுவாரியார் பேஸ்புக் பக்கத்தில் ராமலீலா படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று ரிலீசான திலீப்பின் ‘ராமலீலா’ திரைப்படத்துக்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனத் தெரிகிறது.

ரூ.15 கோடியில் உருவாகியுள்ள ராமலீலா திரைப்படத்தில் ராமநுன்னி என்ற உள்ளூர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் திலீப் நடித்துள்ளார். ேமலும், பிரயாகா மார்டின், ரெஞ்சி பணிக்கர்,முகேஷ், விஜய ராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் திலீப்பின் திரைப்படங்களுக்கு குழந்தைகள், பெண்கள் மத்தியில் எப்போதும் தனி ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.