வேலை தொடர்பான மன உளைச்சலில் இருந்த சினிமா மேக் அப் கலைஞர் ஒருவர்  சொந்த ஊருக்குப்போனபோது, தனது சட்டையை கழுத்தில் மாட்டித் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நேருஜிநகரில் திருச்சி சாலையில் ஒரு ரெயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. நேற்று காலை, மேம்பால கம்பியில் தூக்குப்போட்ட நிலையில் ஒருவர் பிணமாக தொங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பேண்ட் மட்டுமே அணிந்திருந்த ஒருவர் பாலத்தில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்,  அவரது பேண்ட் பையிலிருந்த செல்போன் மூலம் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணையைத் தொடங்கினர். இதற்கு முன்னதாக, அவர் யாருக்கெல்லாம் போனில் பேசியுள்ளார் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தேனியைச் சேர்ந்த போடி ரெங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கணேசன் (48) என்று தெரியவந்துள்ளது. இவர், சென்னையில், சினிமா நடிகர்களுக்கு ஒப்பனை செய்யும் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரது மகன் விஜய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஆனால், வந்தது  முதல் வேலை இல்லாதது தொடர்பாக   தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பதாக போலீஸார் கூறுகின்றனர்.

இன்னொரு கோணத்தில் தனது சட்டையை ஒருவர் சுருக்குப்போட்டுத் தொங்க முடியுமா அல்லது அவரது எதிரிகள் யாரும் கட்டித்தொங்கவிட்டார்களா என்றும் விசாரணை நடந்துவருவதாகத் தெரிகிறது.