’நடிகர்கள் ‘தம்’ அடிக்கும் போஸ்டர்களைப் பார்த்தவுடன் பொங்கி எழுந்துவரும் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்கள் உடனே மேடைக்கு வரவும்’ என்று இன்று வலைதள வாசிகள் அவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.

காரணம் ‘மஹா’ படத்திற்காக நடிகை ஹன்ஷிகா மோத்வாணி ஹாய்யாக கஞ்சா புகைத்தபடி வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். ஜிப்ரான் இசையில் அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் ‘மஹா’ என்னும் க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

வாரணாசியின் பின்னணியில் சில சாமியார்கள் அமர்ந்திருக்க, காவி உடை மற்றும் ருத்திராட்ஷ மாலைகள் சகிதமாக ஒரு நாற்காலியில் தெனாவெட்டாக அமர்ந்தபடி கஞ்சா புகைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வாணி.

விஜய், அஜித், விஷால் போன்றவர்கள் இது போன்ற போஸ்டர்களை வெளியிடும்போது மூக்கு வியர்த்து சில நிமிடங்களிலேயே அறிக்கை வெளிக்கையிடும் அன்புமணி ராமதாஸ் இதுவரை மவுனம் காப்பதால் ‘ஐயா எங்கே இருக்கீக. ஹன்சிகா கஞ்சா அடிக்கிறாக. உடனே கொஞ்சம் தட்டிக்கேளுங்க’ என்ற கோரிக்கைகள் வலைதளங்களில் குவிந்து வருகின்றன.