எட்டு ஆண்டுகளாகப் பெண்டிங்கில் கிடந்து நேற்று ஒட்டுமொத்தமாக வாரி வழங்கப்பட்ட கலைமாமணி விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறார் கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான யுகபாரதி.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.விழாவிற்கு பேரவைத்தலைவர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.

விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். 201 பிரமுகர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.

இந்த கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பங்கேற்காதது ஏன்? என்று பாடலாசிரியர் யுகபாரதியிடம் கேட்டபோது,விருது விழாவில் பங்கேற்று விருது வாங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் நுழைவு அனுமதி ஆகியனவற்றை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்கிற அழைப்பு விழாவுக்கு முன் தினம் வந்தது.அப்போது நான் வெளியூரில் இருந்தேன். அதனால் என்னால் வர இயலாது, நான் ஒருவரை அனுப்புகிறேன் கொடுத்து விடுங்கள் என்றதற்கு, நீங்களே நேரில் வரவேண்டும் ஒரு மணி நேரத்துக்குள் வரவேண்டும் என்றார்கள்.நடைமுறை சாத்தியமே இல்லாத ஒரு செயலைச் செய்யச் சொன்னால் எப்படிச் செய்வது? அதனால் எனக்கு நுழைவு அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை. எனவே நான் விழாவில் பங்குகொள்ளவில்லை’ என்றார். இதை கலைமாமணியிலிருந்து யுகபாரதி தப்பித்தார் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.