உலக நாடுகளை கடந்து, தமிழகத்திலும் பலரை தாக்கி, கோர தாண்டவம் ஆடி வரும், கொரோனா வைரஸ் பாதிப்பால்.. திரையுலகை சேர்ந்த பலர் வேலையின்றி கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. திரையுலகை நம்பி பிழைப்பை ஓட்டி வந்த, கூலி தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள் என பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பெப்சி அமைப்பு, நடிகர் சங்கம், போன்றவற்றின் மூலம் உதவிகள் பெறப்பட்டு தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த வாரம், ஒரு மாதத்திற்கான உதவிகளை நடிகர் விஷால், பிரேம் குமார், ஸ்ரீமன், போன்ற நடிகர்கள் தன்னுடைய வீடு தேடி வந்து உதவி செய்ததாக கூறி வீடியோ மூலம் தெரிவித்த, காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன், கடந்த மூன்று நாட்களுக்கு முன், அஜித்திடம் உதவி கேட்டு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில்...  படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய உண்மையான பெயரை சொல்லி யாருமே அழைத்து இல்லை.  ஆனால் அஜித் மட்டுமே என்னை கார்த்தி என்று கூப்பிட்ட கடவுள். நான் இப்போது வறுமையால் வாடி வருகிறேன். அஜித் அவர்களிடம் உதவி கேட்பதற்காக பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும். இந்த செய்தி தெரிந்தால் நிச்சயம் அஜித் அவர்கள் எனக்கு உதவி செய்வார். எனவே தயவு செய்து அவரிடம் இந்த செய்தியை யாராவது கொண்டு போய் சேர்த்து விடுங்கள். ரசிகர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள் யாராவது அஜித்திடம் இதனை தெரிவித்தால் உடனே அவர் என்னை அழைத்து உதவி செய்வார். எனவே தயவு செய்து யாராவது இதை கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கண்ணீருடன் தீப்பெட்டி கணேசன் கூறியுள்ளார்.

இந்த வீடியோ நடிகர் ராகவா லாரன்ஸ் கண்களில் எதேர்ச்சியாக பட,  தனது சமூக வலைத்தளத்தில், ‘நண்பா இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜரிடம் சேர்த்துவிட்டேன். விரைவில் அஜித் உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவி செய்வார். என்றும் உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, இந்த கொரோனா பீதியிலும் பாடலாசிரியர் சினேகன்... தீப்பெட்டி கணேசனின் வீட்டிற்கே சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து, தீப்பெட்டி கணேசனின் படிப்பு செலவு மொத்தத்தையும் தானே ஏற்று கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.