’சின்னதாக ஒரு ட்விட் போடுவதன் மூலம் எவ்வளவு பெரிய நிறுவனத்தையும் மிகச் சுலபமாக அசிங்கப்படுத்திவிட முடிவது வேதனைக்குரியது’என்று கமல், ரஜினி, சூர்யா படங்களைத் தயாரித்துவரும் லைகா நிறுவனம் பொங்கியுள்ளது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் அத்தனை மெகா பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ ரஜினி,முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’ கமலின் ‘இந்தியன் 2’,’தலைவன் இருக்கிறான்’உட்பட பல நூறுகோடி பட்ஜெட் படங்கள் அத்தனையையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனால் படத்தயாரிப்பைப் பொறுத்தவரையில் லைகா நிறுவனம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. அதனால் சமீபகாலமாக நடிகர்கள்,டெக்னீஷியன்களுக்கு சம்பளம் வழங்குவதில் கெடுபிடி காட்டுவதாகவும் சிலருக்கு சம்பளமே போய்ச்சேரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரேகா ரேக்ஸ் என்பவர் ரஜினியின் ‘2.0’படத்துக்கு லைகா நிறுவனம் தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டு அசிங்கப்படுத்தியிருந்தார். அதாவது தற்போதைய படங்களில் மட்டும் 1000 கோடிக்கு மேல் செலவழித்துக்கொண்டிருக்கும் லைகாவை வெறும் 2 லட்சத்துக்காக அசிங்கப்படுத்தியிருந்தார் அவர். அதற்கு மிகத் தாமதமாக இன்று பதில் அளித்திருக்கும் லைகா நிறுவனம்,...லைகா புரொடக்ஷன்ஸ்  பட்ஜெட்டைப் பொருட்படுத்தாமல், நாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் சப்டைட்டிலுக்கு  ரூ.50 ஆயிரத்தை பட்ஜெட்டாக  ஒதுக்குகிறோம்.  ஏனென்றால், அதற்கான  தொழில்நுட்ப செயல்முறையை முடிக்க எங்களிடம் வசதிகள் உள்ளன.  ரேக்ஸ் என்பவர் 2.0 படத்திற்கு  சப்டைட்டில் பணிக்காக  2 லட்சம் கேட்டார். இது எங்களுக்கு உடன்படவில்லை. இதனால் சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வேலைகளை முடித்து கொடுத்தார். ஆனால்  அவர் மீண்டும் கேட்ட தொகையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இதனால் ஊடகங்கள் முன் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். நாங்கள் 10 நாட்களுக்கு பிறகு ரேக்ஸை அணுகி 1 லட்சம் ரூபாய்  கொடுக்க உடன்பட்டோம். ஆனால் அது நாங்கள் ஒப்புக்கொண்ட பட்ஜெட் அல்ல. இருப்பினும் ஒரு சிறிய கால அவகாசம் கிடைத்ததால்  ஒரு நல்லெண்ணத்தில் அதை செய்ய முற்பட்டோம். ஆனால் அவர் பிரச்னையை  முடிக்க விரும்பவில்லை. மீண்டும் எங்களிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டார். இது நிச்சயமாகச் சந்தை வீதமல்ல. நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனமாக, மாறுபட்ட வகைகளில்  பல்வேறு படங்களைத் தயாரிக்கிறோம் மற்றும் அதில் பல விற்பனையாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர் கேட்கும் தொகை  இயல்புநிலையாக இல்லை.  வர்த்தக நடைமுறையின் படி மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால்  இது  ஊடகங்களில்  வெடித்து பெரிதாகிவிட்டது.   இந்த விவகாரத்தில்  எங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கம் மட்டுமே உள்ளது. இது பகிரங்கப்படுத்தப்பட்டதால், ரூ .1 லட்சம் தொகையைத் தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று பதிவில் குறிப்பிட விரும்புகிறோம்.தயாரிப்பாளர்கள் எந்தவொரு படத்திலும் தங்கள் வியர்வை, கடின உழைப்பு மற்றும் நிதி பல தடைகளைத் தாண்டி முதலீடு செய்கிறார்கள். ஒரு சாதாரண ட்வீட் மூலம் ஒருவரை இழிவுபடுத்துவது மிகவும் எளிதானது. ஒரு திரைப்படத்தை நிறைவு செய்வதற்கான செயல்முறைக்குப் பங்களிக்கும் ஒவ்வொரு விற்பனையாளரையும் நாங்கள் மதிக்கிறோம்என்று குறிப்பிட்டுள்ளனர்.