பிரபல காமெடி நடிகர் லொள்ளு சபா மனோகர் மூன்று வருட காலமாக வேலை இன்றி தவிப்பதாக  தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முன்னணி நடிகர்கள் தவிர குணசித்திர நடிகர்கள் பலரும் ஏழ்மையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே துளசி, தீப்பட்டி கணேசன், பறவை முனியம்மா, சிவசங்கர் மாஸ்டர், ரெங்கம்மா பாட்டி உள்ளிட்டோரின் கதை நாம் ஏற்கனவே அறிந்ததுதான். அதோடு மருத்துவ செலவுக்கு பணமின்றி தவித்தவந்த பிரபலங்களின் நிலை குறித்து ஊடகங்கள் வாயிலாக அறிந்த பிறகே முன்னணி திரை பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏழ்மையில் தவித்து வரும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் மனோகரும் சேர்ந்துள்ளார். லொள்ளு சபா மூலம் பிரபலமான மனோகர் தனது சிறப்பான பாவனை மூலம் மக்களை கவர்ந்தவர். இதன் பின்னர் வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் மனோகர் நடித்துள்ளார். அவரது கை அசைவுகள் ரசிகர்களை பெருதும் கவர்ந்தவை.

ஆரம்ப நாட்களில் எல்பிஜி கேஸ் விநியோகம் செய்பவர், அதன்பின்னர் நீதிமன்றத்தில் குமாஸ்தா வேலை, அதன் பின்னர் 8 ஆண்டுகளாக வங்கியில் தற்காலிகப் பணி என வாழ்க்கையை ஓட்டி வந்த மனோகர், லொள்ளு சபாவிற்கு பிறகு பிரபலமான இவர் கடைசியாக, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பேய்மாமா படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கொரோனா வருவதற்கு முன்பு மாதம் 30 நாளும் நான் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். இந்த மூன்று வருடங்களாக எனக்கு எந்த வேலையும் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறேன். கடைசியாக பேய்மாமா என்ற படத்தில் நடித்தேன். அதன் பின்னர் சரியாக வேலையில்லை.

சந்தானம், வடிவேலு என எல்லா நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையான நபர்களைத் தான் கூடவே வைத்து சம்பளம் போட்டு நடிக்க வைக்கிறார்கள். என்னை அப்பப்ப அவர்களுக்கு தேவைப்படும் போது கூப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம் சினிமாவில் கிடைக்கிறது.

ஆனா ஒண்ணு, நாம என்ன வேலை பார்த்தாலும் கொஞ்சமாவது பணத்தை சேமித்து வைக்க வேண்டும். நான் 10 லட்சம் வரை பணத்தை இழந்துவிட்டேன். என்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. என கூறியுள்ளார்.