Lollu Sabha : தீய நட்பால் சீரழிந்த வாழ்க்கை.. பரிதவிக்கும் லொள்ளு சபா ஆண்டனி - கைகொடுத்து உதவும் சந்தானம்!
Lollu Sabha Antony : 90ஸ் கிட்ஸ் அனைவரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா, இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று திரைத்துறையில் உச்சத்தில் உள்ளனர்.
லொள்ளு சபா நிகழ்ச்சி, பலரின் மனம் கவர்ந்த வெகு சில நிகழ்ச்சிகளில் ஒன்று என்று கூறினால் அது மிகையல்ல. அதில் நடித்த பல்வேறு பிரபலங்கள் இன்று திரைத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் இன்று திரைத்துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு வந்தாலும், ஒரு காலத்தில் அவர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தான் மிகப்பெரிய புகழை அடைந்தனர் என்றே கூறலாம்.
அண்மையில் மறைந்த பிரபல காமெடி நடிகர் சேஷு கூட லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் தான். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகர் ஆண்டனி அவர்களுடைய தற்போதைய பரிதாப நிலை பலரையும் கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து ஒரு தனியார் செய்து நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் ஆண்டனி, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
"திரைத்துறையில் மிக மிகப் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்கின்ற முனைப்போடு தான் நான் செயல்பட்டு வந்தேன். லொள்ளு சபா எனக்கு அதற்கான வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது. ஆனால் கூடாத நண்பர்களுடைய தீய சவகாசத்தால் சொந்த வீட்டை இழந்தேன். தேவையற்ற தொழில்களில் ஈடுபட்டு பெரும்பணத்தை இழந்தேன்".
"ஒரு கட்டத்தில் எனது மனைவியும் என்னை விட்டு விலகினார், கடந்து சில ஆண்டுகளாக நான் தனித்து தான் வாழ்ந்து வருகிறேன். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே எனக்கு அடிக்கடி இருமல் வரும், அதை நான் சரியாக கவனிக்கவில்லை. தற்பொழுது எனக்கு ஆஸ்துமா மிக முற்றிய நிலையில் இருக்கிறது. என்னால் படுத்து உறங்க முடியவில்லை".
"அப்படி படுத்து உறங்கினால் நெஞ்சுப் பகுதியில் ஏதோ அடைப்பது போல தோன்றும். அதனால் தொடர்ச்சியாக நின்று கொண்டே தூங்க ஆரம்பித்தேன். இப்பொழுது எனக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சனையும் வந்திருக்கிறது. ப்ளாடரில் பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உதவிக்கு யாருமே இல்லாத இந்த சூழ்நிலையில் நடிகர் சந்தானம் தான் எனக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்."
"அவர் பல வருடங்களுக்கு முன்பே தன்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அப்பொழுதெல்லாம் அதனை பொறுப்பெடுத்தாமல் சென்று விட்டேன். இப்பொழுது மிகுந்து கஷ்டப்பட்டு வருகின்றேன்" என்றர் அவர்.